2 பிப்., 2012

அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்

சுவேத நதியின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோயில் எழுந்தருளியுள்ள இறைவன் ஏகாம்பரநாதர் என வழங்கப்படுகிறான். இக்கோயிலை ஒட்டிய ஏரியில் பல முதுமக்கள் தாழிகளும் சோழர்கால நாணயங்களும் கிடைத்துள்ளன. இன்று இவ்வூரில் பத்திற்கு மேற்பட்ட நிறைகல் தெற்றிகளைக் காணலாம்.

கோயிலின் அமைப்பு:

இக்கோயில் சுவேத நதியின் தென்கரையில் கிழக்கு முகம் நோக்கி கட்டப்பட்டுள்ளது. உமைக்கு தென்முகம் நோக்கிய ஒரு கற்கோயில் உண்டு. கோயிலைச் சுற்றிலும் பரிவார தேவதைகளுக்குத் தனிக்கோயில்கள் காணப்படுகின்றன. மூன்றாம் குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டில் இக்கோயில் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது. கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன காலத்தால் முற்பட்டவை. தற்போது மகா மண்டபம் இல்லை. எனினும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. உமை கோயிலில் கல்வெட்டுகள் இல்லை. இவ்வுமை கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூண்களில் குலோத்துங்கனும், அவன் தேவியும் இறைவியை வணங்குவதைப் போன்று சிற்பம் காணப்படுதலான இவ்வுமை கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகலாம். இக்கோயிலின் புறச்சுவரில் வேலைப்பாடு மிக்க ஒரு பெண் சிற்பம் உள்ளது. இது திருமகளின் சிலையாகத் தோன்றுவதாக கூறுவர்.

கல்வெட்டுகள்:

இக்கோயிலில் இருந்து 9 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஐந்து கல்வெட்டுகளுக்கு அரசன் யார் என்று தெரியவில்லை கிடைத்துள்ள அகச்சான்றுகளைக் கொண்டு இக்கல்வெட்டுகள் கூறும் செய்திகள், அரசன் காலம் பற்றி ஆய்வோம்.

மூன்றாம் குலோத்துங்கன்:

இக்கோயிலின் தென் சுவரில் மூன்றாம் குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலைக் கொண்ட குலோத்துங்க சோழ தேவன், இக்கோயிலை கற்றளியாக மாற்றினான் என்றும் இதற்கு ஆகும் செலவை, இக்கோயில் நிதியைக் கொண்டும் இளைய நம்பிராட்டியாரின் கொடையைக் கொண்டும் ஈடுசெய்து கட்டி முடித்தான் என்றும் குறிக்கிறது.

இளைய நம்பிராட்டியைப் பற்றிக் குறிப்பு காணப்படுவதால் குலோத்துங்கனுக்குப் புவனமுடையாளே அன்றி இளைய நம்பிராட்டி என்றதொரு தேவியும் இருந்தாள் என்பது தேற்றம். 10 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1188) திருவேகம்பம் உடைய நாயனார் (சிவன்) குன்றமெறிந்த பெருமாள் (முருகன்) கோயில்களைப் புதுப்பிக்க விஜய ராஜேந்திர சோழ தேவன் கொடுத்த நிலத்தானம் பற்றியது. இக்கல்வெட்டுக் குறிக்கும் அரசன் மூன்றாம் குலோத்துங்கனே என்று ஆண்டு அறிக்கை தெளிவாக்குகிறது. 5-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இக்கோயிலைப் புதுப்பிக்கவும், வழிபாடு செய்யவும், மேல் கங்கபாடியில் (தெடாவூர்) உள்ள நிலத்தைக் குலோத்துங்க வாணகோவரையன் வழங்கினான் என்று கூறுகிறது. இவன் குலோத்துங்கனின் அரசியல் அதிகாரி. இவனைப் பற்றிய கல்வெட்டுகள் திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் காணக் கிடைகின்றன. மேற்கண்ட கல்வெட்டையொட்டிக் குலோத்துங்கனின் 9-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் குலோத்துங்க சோழ வாணகோவரையன் கொடுத்த நிலத்தானம் பற்றியே குறிப்பிடுகிறது. 20-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1210) வாணகோவரையன் (மகதைப்பெருமாள்) என்ற சிற்றரசன் ஆவணி 27-ஆம் நாள் தெடாவூரில் 500 குழி நிலத்தைக் காணியாகப் பெருங்களப்பரையன் பக்கம் அழகியான் என்பவனுக்கு வழங்கிய செய்தியைக் குறிக்கிறது.

மேற்கண்ட கல்வெட்டையொட்டித் தயாளு நல்ல பெருமாள், விளுப்பாத ராயன் என்போர் புத்தூர் என்ற கிராமத்தை இக்கோயில் புறவாரியனுக்கு (வில்லாதிராயன்)வழங்கிய செய்தியை ஒரு கல்வெட்டுக் கூறும் வாணக்கோவரையனைப் போன்றே, தயாளு நல்ல பெருமாள், விளுப்பாத ராயன் என்போரும் நம் குலோத்துங்கனின் அரசியல் அதிகாரிகள் ஆவர். கோமுகத்திற்குக் கீழ் பாவப்பட்டுள்ள ஒரு கல்லில் கூத்தாண்டான் என்பவன் கோமுகத்தை அமைத்த செய்தியைக் கூறுகிறது. இத்தொட்டி கோயில் கற்றளியாக மாற்றப்பட்டபோது கட்டபட்டதாகக் கொண்டால், கி.பி.1205-இல் அமைக்கப்பட்டதென்று கூறலாம்.

சுந்தர பாண்டியன்:

இக்கோயிலின் வடபால் 7-ஆம் ஆட்சியாண்டு (அரசன் பெயர் இல்லை) கல்வெட்டு கணபதி ஆள்வான், கப்பலூர் வாணாதிராயன் ஒரு நிலத்தை இக்கோயிலுக்கு எழுதிவைத்தான் எனக் கூறுகிறது. இவன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் அரசியல் அதிகாரி என ஆறகழூர் கல்வெட்டுப் பகுதியில் கண்டோம்.

இக்கோயிலில் கிடைத்த ஒன்பது கல்வெட்டுகளில் எட்டு கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவை என்பதும் ஒன்று. சுந்தரபாண்டியன் கல்வெட்டு என்றும் கண்டோம். நம் குலோத்துங்கனுக்கு இளைய நம்பிராட்டி என்ற ஒரு பட்டத்தரசி இருந்தாள் என்றும், குலோத்துங்கனுக்கு விசய இராசேந்திர சோழன் என்ற ஒரு பெயர் வழங்கப்பட்டதென்றும் தெடாவூர் கல்வெட்டுகள் வழி அறிவோம்.

கோயில் கொண்டுள்ள பிற தெய்வங்கள்:

1. அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி ஆலயம்.

2. அருள்மிகு விநாயகர் ஆலயம்.

முக்கிய திருவிழாக்கள்:

மேற்படி ஆலயத்தில் நவராத்திரி, அன்னாபிஷேகம், தீபாவளி, கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஏகாதசி திருவிழாக்கள் நல்ல முறையில் பிரதி வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.